குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, “என்ன நடக்கிறது” என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, வன்மம், சூழ்ச்சி என ராட்டினம் போலச் சுழலும் கதாபாத்திரத்தை, தன் நடிப்பு எனும் அச்சாணியைக் கொண்டு நிலை நிறுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் பிருத்வி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லனிசத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களும் கோபத்தைத் தூண்டும் அளவில் படு ரியலான நடிப்பைக் கொடுத்து பாஸ் ஆகிறார்கள். பாலாஜி எஸ்.யூவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது.