கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ), சந்திரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் பிரச்சினையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்.
உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.
பூசம்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். எந்த ஒரு சிக்கலான பிரச்சினைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
ஆயில்யம்: இந்த வாரம் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: குல தெய்வத்தை பிரார்த்திப்பது.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் புதன் (வ), சந்திரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் எந்த காரியத்திலும் வேகம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.
கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வி கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.
மகம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.
பூரம்: இந்த வாரம் ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்குவது.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), சந்திரன், சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் விரும்பி பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.
அஸ்தம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும். புதிய நபர்களின் நட்பை ஏற்படுத்தும்.
பரிகாரம்: நவகிரகத்தை வணங்கி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |