29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே…
கன்னி: வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய கன்னி ராசி அன்பர்களே! அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
கிரகநிலை: இதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி களத்திர ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ராசியையும் , பத்தாம் பார்வையால் சுகஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள்.
புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.
தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கவுரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண்பழி சுமந்த சிலர், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும்.
குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலைதூக்கலாம், கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.
வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சககலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மனவருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.
பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வீண் செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
அஸ்தம்: தேவையான பண உதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கையை வழிபட்டு வரவும். முடிந்தால் புதன்கிழமைகளில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும். புருஷசூக்தம் பாராயணம் செய்யவும் | சனி பகவானின் பார்வைகள்:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |