சில வருடங்களாகத் தடைப்பட்டிருக்கும் சுடலை மாடன் சாமியின் கொடை விழாவை நடத்திவிட வேண்டும் என முடிவெடுக்கும் நாயகனின் போராட்டமே இந்த ‘மாடன் கொடை விழா’.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொடை விழா சமயத்தில் தெருக்கூத்து கலைஞரான திருநங்கை மாதவி மர்மமான முறையில் மரணமடைகிறார். இதைத் தற்கொலை வழக்காக போலீஸ் முடிக்கிறது. இதன்பிறகு அந்த ஊரில் கொடை விழா பல வருடங்களாக நடக்காமல் இருக்கிறது. மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கொடை விழா நடத்துவதுதான் நம் துன்பங்களுக்குத் தீர்வாக இருக்கும் என ஊர் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், கோயில் நிலத்தை ஞானமுத்து என்பவரிடம் அடமானம் வைத்துவிடுகிறார் சாமியாடியும், நிலத்தின் பொறுப்பாளருமான தாமஸ்.

குடிநோயால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று கிறிஸ்தவராக மாறியவர் இவர். இந்நிலையில், கொடை விழா நடத்தியே தீர வேண்டும் என்ற பாட்டியின் ஆசையை நிறைவேற்றும்பொருட்டு, இழந்த நிலத்தை மீட்டு கொடையை நடத்த வேலையிலிருந்து விடுப்பு எடுத்து, சென்னையிலிருந்து ஊருக்கு வரும் தாமஸின் மகன் முருகன் சந்திக்கும் சவால்கள்தான் படத்தின் கதை.
திரையில் பெரிதும் காட்டப்படாத நெல்லை மாவட்டத்து வழக்கங்களைத் திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் இரா.தங்கபாண்டி. ஆரம்பத்தில் இந்தக் களம் சுவாரஸ்யப்படுத்தினாலும் போகப் போக வலுவிழந்த திரைக்கதையால் படம் சோர்வடைகிறது.
சாந்தமான இளைஞனாக வரும் இடங்களில் முருகனாக எதார்த்தமாகப் பொருந்திப்போகும் அறிமுக நாயகன் கோகுல் கவுதம், உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் தடுமாறுகிறார். இறுதியில் சாமியாடும் காட்சியிலும் போதிய உக்கிரம் இல்லை. நாயகியாகத் துருதுருவென இருக்கிறார் சாருமிஷா. ஆனால் இவர்களது சம்பிரதாய காதல் காட்சிகளும், பாடல்களும் கதையோட்டத்திற்குத் தடையாகவே இருக்கின்றன. தனக்குக் கொடுக்கப்பட்ட கனமான கதாபாத்திரத்தை முடிந்தளவிற்குத் தொய்வில்லாமல் கரைசேர்க்கிறார் திருநங்கை ராஷ்மிதா.
மிரட்டியிருக்க வேண்டிய வில்லன் கதாபாத்திரத்தில் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருக்கிறார் சூர்யநாராயணன். அனுபவம் வாய்ந்த சூப்பர் குட் சுப்பிரமணியம், ஸ்ரீப்ரியா ஆகியோருக்குமே படத்தில் பெரிதாக வேலை இல்லை. ஊர்க்காரர்களாக வருபவர்கள் கதைக் களத்திற்கு இயல்பாகப் பொருந்திப்போனாலும், நடிப்பில் திணறுகிறார்கள். சில காட்சிகள் வைடு ஆங்கிளில் வைக்கப்பட்டு வசனங்கள் மட்டும் டப்பிங்கில் பேசப்பட்டிருப்பது நம்மைப் படத்தில் முழுதாக ஒன்ற விடாமல் தடுக்கிறது.

குறைந்த பட்ஜெட் படங்களுக்கான தொழில்நுட்பரீதியான போதாமைகள் இதில் உண்டுதான். அதில், முடிந்தளவு இயல்பாக நெல்லை நிலப்பரப்பைத் திரைக்குக் கொண்டுவருகிறது ஒளிப்பதிவாளர் சின்ராஜ் ராமின் கேமரா. ரவிச்சந்திரனின் எடிட்டிங்கானது படத்தின் போதாமைகளை முடிந்தளவு மறைக்க உதவியிருக்கிறது. ஆனால், தேவையற்ற காட்சிகளைக் கருணையின்றி கத்தரித்திருக்கலாம் அவர். பின்னணி இசையிலும் விபின் பெரிய குறை வைக்கவில்லை. ஆனால், பாடல்கள் மிகச் சுமார் ரகம்.
கதையாகச் சுவாரஸ்யப்படுத்தினாலும் யூகித்துவிடக்கூடிய திரைக்கதை இரண்டாம் பாதியில் அயர்ச்சியைத் தருகிறது. முக்கிய பிளாஷ்பேக் காட்சியில் போதிய அழுத்தம் இல்லை. கலை, மரபு, மதம், கிராமப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் முயற்சியிலும் முழுமை இல்லை.
எழுத்திலும், திரையாக்கத்திலும் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் இந்த ‘மாட’னுக்கு நாமும் விழா எடுத்திருக்கலாம்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks