ஏப்ரல் 9-ம் தேதி இரவே அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ப்ரீமியர் காட்சிகளை நடத்த முடிவு செய்திருக்கிறார் விநியோகஸ்தர் ராகுல்.
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்.
தற்போது ஏப்ரல் 9-ம் தேதி இரவு 10:30 மணிக்கே ப்ரீமியர் காட்சியை நடத்த முடிவு செய்திருக்கிறார் ராகுல். இதனை தனது எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் முன்பே படத்தை திரையிட்டால் விமர்சனத்தால் வசூல் பாதிக்கிறது என்றெல்லாம் சர்ச்சை நிலவி வரும் நிலையில், விநியோகஸ்தரின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.