இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கியுள்ள படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமான இது மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் இளங்கோ ராம் கூறும்போது, “ இது சிங்களத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘டென்டிகோ’ (tentigo) என்ற படத்தின் ரீமேக். பட விழாக்களிலும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராம் பார்த்துவிட்டு தமிழில் ரீமேக் செய்ய, கார்த்திக் சுப்புராஜிடம் பரிந்துரைத்தார். அப்படித்தான் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆனது. தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றம் செய்துள்ளோம். பெரியவர் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினை அவர் குடும்பத்தில் என்ன மாதிரியான சிக்கலை கொண்டு வருகிறது, அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை. அவர்களுக்கு அது சீரியஸ் பிரச்சினையாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். டார்க் காமெடி படம். இது அடல்ட் காமெடி படம் என்றாலும் முகம் சுளிக்கும்படியாகவோ, அருவருப்பாகவோ இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும்” என்றார்.