நடிகை சன்யா மல்கோத்ரா நடித்துள்ள ‘மிஸஸ்’ என்ற படம் சமீபத்தில் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆணாதிக்கமிக்க வீட்டிற்குத் திருமணமாகி வரும் ஒரு பெண், எந்த அளவுக்குச் சிரமத்தை எதிர்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் திருமண முறைகள் குறித்தும் லோக் சபா எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியக் கூட்டுக்குடும்பங்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். நான் வளரும்போது, வீட்டைக் கட்டுப்படுத்தாத, எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது வெளியே செல்ல வேண்டும் என்று கட்டளையிடாத, தன் கணவரிடம் அவர் செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்காத ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

அப்பா எங்களுடன் வெளியே சாப்பிட விரும்பும் போதெல்லாம் அம்மா எங்கள் அனைவரையும் திட்டினார். ஏனென்றால் எங்களுக்காகச் சமைப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு உணவின் சுகாதாரம்/ஊட்டச்சத்து உட்படப் பல விஷயங்களை அம்மாவால் கட்டுப்படுத்த முடிந்தது. வயதானவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆயாக்களாகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஆதரவு கொடுப்பவர்களாகவும் பணியாற்றினர்.
திருமணங்கள் கவனத்தையோ அல்லது அங்கீகாரத்தையோ பெறுவதற்கான ஒரு வழியாக இல்லாமல், பலவீனமானவர்களின், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காகவே செயல்படுகின்றன. முந்தைய தலைமுறையினர் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேள்வி கேட்காமல் தங்கள் கடமைகளைச் செய்தனர். பல பாலிவுட் காதல் கதைகள் திருமண முறையைச் சிதைத்துவிட்டன.
நாட்டில் திருமணங்கள் எப்படி இருந்ததோ அப்படியே எப்போதும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு காரணம் இருந்தது. உங்கள் கடமையைச் செய்யுங்கள். கடமை செய்துவிட்டு சென்று கொண்டிருங்கள். வாழ்க்கை குறுகியது மற்றும் விரைவானது” என்று தெரிவித்தார்.
இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும். கங்கனா இப்படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது படத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel