பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது நடித்து வரும் ஜிதாரே ஜமீன் பர் என்ற படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. 37 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் இருக்கும் ஆமீர் கான் அடுத்த மாதம் 60வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். அவர் தனது திரைப்பட வாழ்க்கை, வருமானம், தோல்விகள் குறித்து அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவரிடம், ‘ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இமேஜை வைத்திருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் நடித்து சோதனை செய்து பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கிறது’ எனக் கேட்டதற்கு, ”நான் கடந்த 20 ஆண்டுகளாக நான் நடிக்கும் படத்திற்கு ஒரு நடிகருக்கான கட்டணத்தை வாங்கியது கிடையாது.

நான் நடிக்கும் படம் நன்றாக ஓடினால் மட்டுமே எனக்கு வருமானம் கிடைக்கும். படத்தைத் தயாரித்ததற்கான செலவை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எனது அனுபவத்தில் ஒரு படம் 20 முதல் 30 கோடி வரை வசூலித்தால் மட்டுமே அப்படத்திற்கான அடிப்படை செலவுகளை எடுக்கமுடியும். ஒரு படம் தயாரிக்க ரூ.200 கோடி செலவாகிறது. நடிகரும் கணிசமான ஒரு தொகையைக் கட்டணமாக வசூலிக்கும்போது படம் தோல்வி அடைந்துவிட்டால் படத்தைத் தயாரிக்க ஆகும் செலவை எப்படி எடுக்க முடியும்.
படம் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம் வாங்கும் எனது அணுகுமுறை புதிது கிடையாது. ஐரோப்பாவில் திரைப்படக் கலைஞர்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். இது போன்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் என்னால் புது சோதனைகளை எதிர்கொள்ள முடிகிறது. புதிய கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
