சென்னை: பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார்.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா. பரதம். ஃபோக். வெஸ்டர்ன் என பலவகையான நடனங்களில் சிறப்புற்று விளங்கியதால், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.
1989-ல் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ என பல்வேறு படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக, அவரது படங்களில் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெஸ்டர்ன் வகை பாடல்கள், தேவாவின் துள்ளலான குத்துப் பாடல்களுக்கு பிரபுதேவா சிறப்பாக ஆடியதால், அவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று போற்றினர்.
மின்சாரக் கனவு படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்காக பிரபுதேவா தேசிய விருது பெற்றார். தொடர்ந்து, இந்தி, தமிழ் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவ்வாறு நடனம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு பிரிவுகளில் புகழ்பெற்ற பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்ச்சியை ‘லைவ் ஷோ’வாக எங்கும் நடத்தியதில்லை.
இந்நிலையில், அருண் ஈவென்ட்ஸ் சார்பில் பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி முதல்முறையாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், நடன நிகழ்ச்சி தொடர்பான அவரது பேட்டியில், “தொடர்ந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறேன். ரசிகர்கள் எதிர்பார்ப்பதைவிட 200 சதவீத திறமையான நடனத்தை வெளிப்படுத்துவேன். இந்நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று தெரிவித்திருந்தார். இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்தது.
இதற்கிடையில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக அரங்கேறியது. நிகழ்ச்சியின் பங்குதாரராக ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தியது. நிகழ்ச்சியை இயக்குநர் ஹரிக்குமார் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார். டி-ஜே மிக்ஸ் இசையில் ஆட்டம், பாட்டம், கரகோஷத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச் ஒளிரச் செய்து பிரபுதேவாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது. “ரசிகர்களின் விசில் சத்தம் தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத். நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ஜனனி, லாஸ்லியா, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், ப்ரீத்தி அஸ்ராணி, ஷெரின் ஸ்ரிங்கர், பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால், மாதுரி ஜெயின், கொமல் சர்மா, நிஷ்விகா நாயுடு, ஃபரியா அப்துல்லா, அனுகீர்த்தி வாஸ், டிஜே தீபிகா உள்ளிட்டோர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வில், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ். நடிகர் பாக்கியராஜ், நடிகைகள் ரம்பா, மீனா, ரோஜா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.