அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களின் வசூலிலேயே மொத்த பட்ஜெட்டின் பாதியை எளிதில் கடந்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ் பணிபுரிந்துள்ளார். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் கல்லா கட்டி வருகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்திய அளவில் ரூ.6.5 கோடியையும், உலக அளவில் ரூ.11 கோடியையும் கடந்துள்ளது. இரண்டாவது நாளான சனிக்கிழமை இந்திய அளவில் மட்டும் ரூ.9 கோடியை தாண்டுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இரு நாட்களில் மட்டும் உலக அளவில் ரூ.25 கோடியை எளிதில் எட்ட வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
விளம்பரச் செலவுகள் உட்பட மொத்தம் ரூ.35 கோடியில் உருவாகியுள்ள ‘டிராகன்’ இப்போதே பட்ஜெட்டில் பாதியை எளிதில் கடந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் புக்கிங் அதிகமாகி கொண்டிருப்பதால் இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடையும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். ‘லவ் டுடே’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு மற்றொரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக அமைந்துள்ள ‘டிராகன்’ படம் எப்படி? – டிராகன் – விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் ‘பக்கா’ என்டர்டெயினர்!