‘அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனின் அணுகுமுறை குறித்து தனது பேச்சில் புகழாரம் சூட்டினார் சாய் பல்லவி.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் வெளியாகி 100 நாட்கள் கடந்துவிட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் கலந்துக் கொண்ட விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சாய் பல்லவி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். சிவகார்த்திகேயன் குறித்து பேசும்போது, “முகுந்த் கதாபாத்திரம் மீது நம்பிக்கை வைத்து நடித்திருந்தார். அதே வேளையில் உடன் நடிக்கும் நடிகைக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்தார். அந்தவிதம் என் இதயத்தை ரொம்பவே கவர்ந்தது.
இப்போது ‘பராசக்தி’ படத்தின் புகைப்படங்கள், டீஸர் பார்த்தேன். புதிது புதிதாக கதாபாத்திரங்களில் நடித்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறார். அமரன் படம் வெளியாகி 100 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால், இப்போதுதான் 100-வது நாள் கொண்டாடுகிறோம். இந்த நாட்களில் தினமும் யாரேனும் ஒருவர் ‘அமரன் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது’ என்று சொல்லிவிடுவார்கள்.
திரையுலகில் 10 ஆண்டுகளாக இருக்கிறேன். இப்படி ஒரு படத்துக்கு நடப்பது இதுவே முதல் முறை. இந்த வெற்றிக்கு ஒருத்தர் மட்டுமே காரணமா என்றால் தெரியவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவினருமே தங்களுடைய 100% இப்படத்திற்குள் போட்டதால் மட்டுமே இது சாத்தியமானது” என்று தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.