கார்த்தி நடிக்கவுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்துக்கான நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவே, தற்போது சம்பளம் மற்றும் தேதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
கார்த்தி – தமிழ் இணையும் படத்தின் படப்பிடிப்பு, ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரத்தில் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘கார்த்தி 29’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர் பணிபுரியவுள்ளார்.
இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடித்து, 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.