மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மங்களவாரம்’ படத்தின் 2-வது பாகம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மங்களவாரம்’. குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. சில திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. இந்தப் படம் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, 2-ம் பாகம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியானது. தற்போது தான் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தினை போலவே வித்தியாசமான களம் கொண்ட 2-ம் பாகத்தின் கதையினை எழுதி முடித்திருக்கிறார் இயக்குநர் அஜய் பூபதி. முதல் பாகம் போல் அல்லாமல் பெரும் பொருட்செலவில் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் பெரிய நாயகியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
2023-ம் ஆண்டு வெளியான படம் ‘மங்களவாரம்’. தெலுங்கில் உருவக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இதில் பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, ப்ரியதர்ஷி, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் காட்சியமைப்புகள், ஒளிப்பதிவு முறை என பல விஷயங்களில் இப்படம் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.