‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் தரத்துடனும், ‘புஷ்பா 2’ வசூலுடனும் ஒப்பிட்டு ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா கலாய்த்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடி என்று சொன்னால், அசாதாரண விஷுவல் அனுபவம் தந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பட்ஜெட் ரூ.4,500 கோடி எனலாம். அதேபோல், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.186 கோடி என்று சொன்னால், ‘புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1,860 கோடியாக இருந்திருகக் வேண்டும்.
ஆக, நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். ஓர் உண்மைக்கு அடிப்படையே மிகுந்த நம்பகத்தன்மைதான். அந்த வகையில், ‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினர் சொல்லும் பொய்க்கு கூட கூடுதலாக நம்பகத்தன்மை தேவைப்படுகிறது” என்று கலாய்த்துள்ளார்.
கேம் சேஞ்சர் வசூல் நிலவரம்: இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் காம்போவில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கியாரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படம் ஜன.10-ல் வெளியானது. கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட அப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.186 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
அதேவேளையில், இந்திய அளவில் முதல் நாள் மட்டுமே ‘கேம் சேஞ்சர்’ நல்ல வசூல் ஈட்டியது என்றும், அடுத்தடுத்த நாட்களில் பெரும் சரிவை சந்தித்தது என்றும் திரை வர்த்தக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐந்தாவது நாள் முடிவில்தான், இந்திய அளவில் ரூ.100 கோடி வசூலைத் தொட்டுள்ளது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம்.
ரூ.450 கோடியில் உருவான ‘கேம் சேஞ்சர்’ வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்பதையே வசூல் விவரங்கள் காட்டுகின்றன. இந்தப் பின்னணியில்தான், முதல் நாளில் ‘ரூ.186 கோடி வசூல்’ என்ற படக்குழுவின் அதிகாரபூர்வ தகவலை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தை ராம் கோபால் வர்மா கலாய்த்துள்ளார்.