‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் திரைப்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் லால். ஆனால், வழக்கொழிந்து போன திருப்பங்கள், பின்கதை, கதாபாத்திரம் போன்றவற்றைத் திரைக்கதையில் சேர்த்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.
போர்ச்சுகீசிய பின்புலம், பொக்கிஷம், பூதம், பேசும் பொம்பை என தொடக்கத்தில் மட்டுமே கவர்கிறது படம். படத்தின் முக்கிய எமோஷனாக வலம் வருவது இஸபெல்லா கதாபாத்திரம்தான். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பரோஸுக்கும் இஸபெல்லாவுக்கும் இடையிலான எமோஷன்கள் செயற்கைத்தனங்களுடன் கதகளி ஆடுவதால் திரைப்படத்துடன் கனெக்ட்டாக முடியாமல் நம்மைத் தள்ளி நிற்க வைக்கின்றன. முக்கிய வில்லனைச் சமாளிக்கப்போகும் ட்ரீட்மென்ட்டை முன்கூட்டியே ஆழமாக நம்மிடையே பதிவு செய்துவிட்டு, க்ளைமேக்ஸில் சப்ரைஸ் ஆகவிடாமல் தடுத்து நிறுத்தி, `Why bro?’ எனக் கோபத்துடன் கேள்வி கேட்க வைக்கிறார் இயக்குநர்.
3டி-யில் நல்ல அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென தொடர்பே இல்லாமல் ஆழ்கடலுக்குள் மூழ்கி அனிமேஷன் வடிவில் பாடலைக் கொடுத்து, தேவையில்லாமல் நீள்கிறது திரைக்கதை. மேலும், மற்ற பாடல்கள் இடம்பெறும் சூழலும் செயற்கையாகத் திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கின்றன. பரோஸ் யார் என்பதைப் படம் தொடங்கும் வேளையிலேயே எடுத்துரைத்துவிட்ட பின்னும், அதனை அடிக்கடி வெவ்வேறு விதமாகக் காட்சிப்படுத்தி ரிப்பீட் அடிப்பது பார்வையாளர்களைச் சோர்வடைய வைக்கின்றன.