வெற்றிமாறம் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஶ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ராஜிவ் மேனன், கிஷோர், சேத்தன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் விடுதலை 2.
நாளை (டிசம்பர் 20ம் தேதி) வெளியாகவுள்ள இந்த படத்தின் முழுமையான காட்சிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரம் வரை படத்திற்கான எடிட்டிங் வேலை நடந்ததாகவும், இறுதியாக 8 நிமிட காட்சிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் வேலையை முடித்துவிட்டு களைப்பான முகத்துடன் பேசியுள்ளார் வெற்றிமாறன்.
அவர், “விடுதலை பார்ட் 2 வேலைகள் இப்போதுதான் முடிந்தன. மிக நீண்ட, சோர்வளிக்கக்கூடிய வேலை. ரிலீசாவதற்கு முன்னர் நீளத்தைக் குறைக்க வேண்டுமென குறைத்திருக்கிறோம்.
படத்தில் வேலை செய்த அனைவருக்கும் இது மிகப்பெரிய கல்வி. இந்த பயணமே மிகப் பெரிய பயணம். இந்த பயணித்தில் இருந்த எல்லாருடைய பங்களிப்பும்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது.