சென்னை: சண்டைபயிற்சியாளரும் நடிகருமான கோதண்டராமன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.
சென்னையைச் சேர்ந்த கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். ‘பகவதி’, ‘கிரீடம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார். ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கலகலப்பு’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பெரம்பூரில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு 10 மணி அளவில் (டிச.18) கோதண்டராமன் காலமானார். இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.