உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் க்ரைம் திரில்லர் படம் ‘லாரா’. மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
எம்.கே. ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். அசோக்குமார், அனு ஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, தயாரிப்பாளர் கார்த்திகேசன் என பலர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரகு ஸ்ரவன் குமார் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “ஒரு படத்துக்கு நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். அது தேவையில்லை என்பேன் நான். ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு ‘சிங்காரவேலன்’ படத்தை எடுத்தேன். கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? சிறு வயதில் காணாமல் போன பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கிற கதாநாயகன் என்பதுதான் கதை. இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. அந்தப் படத்தின் விளம்பரத்தின் போது, மூளையைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன். அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. அப்போது கேள்வி எழாத அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். என்னைச் சந்திப்பவர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்கிறார்கள். யாரும் வாய்ப்பு தருவதில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தை நான் பார்த்து விட்டேன். உச்சியில் ஏறி விட்டால், கீழே இறங்கித்தான் வரவேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால்தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது” என்றார்.
விழாவில் இயக்குநர்கள் பேரரசு, அரவிந்தராஜ், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் உட்பட பலர் பேசினர்.