சென்னை: நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலியாக ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் இரைச்சல், அதீத சத்தம் எரிச்சலூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இணையத்தில் தொடர்ந்து ‘கங்குவா’ பட குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியான நிலையில், “படத்தின் முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை. இரைச்சலாக இருக்கிறது. இந்தியா திரைப்படங்களில் பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. கங்குவா மீது முதல் நாளில் எதிர்மறை கருத்துகளைத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது” ஜோதிகா பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலியாக ‘கங்குவா’ படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட படத்தின் ஆரம்பக் காட்சிகளே பெரும்பாலும் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.