சென்னை: ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விசாகப்பட்டினத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மற்றொரு சண்டைக் காட்சி, பாடல் ஆகியவற்றை படமாக்கி விட்டால், ஒட்டுமொத்த படப்பிடிப்புமே முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கூலி’ படத்தை முடித்துவிட்டு ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.