ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் நடிக்க உள்ளதை கொரியன் நடிகர் டான் லீ உறுதி செய்துள்ளார். ஆனால் இது தொடர்பாக படக்குழு இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் உடன் நடிக்க வைக்க டான் லீயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்தவொரு படக்குழுவினரும் இதனை உறுதி செய்யவில்லை. தற்போது ‘சலார் 2’ படத்தில் பிரபாஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தம்ஸ் அப் செய்திருக்கிறார் டான் லீ. இப்பதிவின் மூலம் பிரபாஸ் – டான் லீ இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்கள் என்பது உறுதியாகிறது. மேலும், சந்தீப் ரெட்டி வாங்க இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின.
ஆனால், ‘சலார்’ படத்தின் பிரபாஸ் புகைப்படத்தினை பகிர்ந்ததால், இப்போது ‘சலார் 2’வில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இச்செய்தி தொடர்பாக ‘சலார் 2’ மற்றும் ‘ஸ்பிரிட்’ இரண்டு படக்குழுவினருமே உறுதி செய்யவில்லை. விரைவில் இதனை உறுதிப்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. ‘ட்ரெயின் டு பூசான்’ என்ற படத்தின் மூலம் உலக அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தார் டான் லீ. பின்பு அவர் நடித்த படங்கள் யாவுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.