கடந்த 6-7 வருடங்களாக தோல்வி படங்களே கொடுத்துள்ளேன் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் ‘2கே லவ் ஸ்டோரி’. சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு இடையே சுசீந்திரன் அளித்த பேட்டியொன்றில், “2கே லவ் ஸ்டோரி எனது முதல் படம் மாதிரி தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த 6-7 வருடங்களாக தோல்வி படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் தோல்வி படங்கள் என்ற காரணத்தை தேடி, அதை சரி செய்துக் கொண்டு மீண்டும் ஜூரோவில் இருந்து வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன். நிச்சயமாக இப்படம் வெற்றி படமாக அமையும். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
2கே லவ் ஸ்டோரி படத்தின் கதை 2கே கிட்ஸ்க்கு ஆலோசனை கொடுப்பது மாதிரி இருக்காது. அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஆலோசனை சொல்வது போன்று இருக்கும். இப்போதுள்ள பசங்க எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கையை புரிந்துக் கொள்ளுங்கள். காலத்தின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பது மாதிரி ஆலோசனையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். அதற்குப் பிறகு சில ஆண்டுகளாக தோல்வி படங்களைக் கொடுத்துள்ளார்.