பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் 5 குழந்தைகள் நடித்திருந்தனர். அவர்களைத் தேர்வு செய்ய 4 ஆயிரம் குழந்தைகளை ஒத்திகைக்காக அழைத்திருந்தனர். பல நாட்கள் நடந்த ஒத்திகையில் 5 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அக்குழந்தைகளுடன் சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு மும்பை கோரேகாவ் திரைப்பட நகரில் 30 நாட்கள் நடந்தது. இப்படப்பிடிப்பின் போது 5 குழந்தைகளில் நிர்பயா பாட்டீல் என்ற சிறுமியின் நடிப்பு நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பின் போதும் எப்போதும் சல்மான் கானுடன் நிர்பயா இருந்தார். 10 வயதாகும் நிர்பயா மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அவரின் தந்தை லீலாதர் பாட்டீல் மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். கிரைம் சீரியல்களில் நடித்திருக்கிறார். நிர்பயாவிற்கும் படங்களில் நடிக்க ஆசை வந்தது. உடனே சிகந்தர் படத்திற்காக குழந்தைகள் தேர்வுக்காக ஒத்திகை நடப்பது குறித்து கேள்விப்பட்டு தனது மகளை அங்கு அழைத்துச்சென்றார். இதில் 4000 பேரில் ஒருவராக நிர்பயா தேர்வு செய்யப்பட்டார். சிகந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் நிர்பயா உட்பட படத்தில் நடித்த 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சல்மான் கான் அங்குள்ள பிரபலமான மால் ஒன்றுக்கு சென்றார். அந்த சூப்பர் மார்க்கெட்டில் குழந்தைகளுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுத்தார்.
ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி சல்மான்கான் கிப்டாக கொடுத்தார். இதனால் குழந்தைகள் ஆச்சரியமும் உற்சாகமும் அடைந்தனர். இதுகுறித்து நிர்பயா கூறுகையில்,”‘படப்பிடிப்பு முழுவதிலும் அவர் எங்களிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அந்த அனுபவத்தை எங்களால் மறக்க முடியாது. அவர் எனக்கு வாங்கிக்கொடுத்த கிப்ட்களை பத்திரப்படுத்திக்கொள்வேன்”என்று தெரிவித்தார்.