2026-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
2026-ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், ‘பராசக்தி’ தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் “இந்த பொங்கல்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் ‘பராசக்தி’ படமும் பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, பொங்கல் வெளியீட்டிற்கு ‘பராசக்தி’ திட்டமிடப்படுவதாக கூறியிருந்தார். இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
‘கோட்’ படத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு காட்சியில் நடித்திருந்தார்கள். அக்காட்சியில் “துப்பாக்கியை பிடிங்க சிவா” என்று விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுப்பார். அக்காட்சியின் மூலம் அவர் தான் அடுத்து என்று விஜய் கூறுவதாக பலரும் தெரிவித்தார்கள். தற்போது விஜய் படத்துக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன் படமே வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.