கலைஞர் கருணாநிதி எழுதிய `பொன்னர் சங்கர்’ வரலாற்று நாவலைத் தழுவி நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து `பொன்னர் சங்கர்’ திரைப்படத்தை எடுத்தார்.
இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்திரைப்படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இத்திரைப்படம் எடுக்க முழுமையாக 4 வருடங்கள் செலவானதாம். மற்ற களங்களைக் கொண்ட படங்களைக் காட்டிலும் ப்ரீயட் திரைப்படங்கள் அதிகமான காலம் எடுத்துக் கொள்ளும்.
அந்தக் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய கலை இயக்கம், ஆடை, கிராபிக்ஸ் என அத்தனை துறைகளிலும் துல்லியம் காட்டி உழைப்பதற்கு நேரம் தேவைப்படும்.
அதுபோலவே, இந்தத் திரைப்படமும் உருவாவதற்கு நான்கு ஆண்டுகளைக் எடுத்துக் கொண்டதாம். இது குறித்து நடிகர் பிரசாந்த், “ 60, 70-களுக்குப் பிறகு சரியான வரலாற்று திரைப்படங்கள் வரவில்லை. பலரும் முறை செய்தார்கள். அதன் பிறகு நானும் என்னுடைய தந்தையும் திட்டமிட்டு இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
முழுமையாக நான்கு ஆண்டுகள் இத்திரைப்படம் எடுத்துக்கொண்டது. என்னுடைய சில திரைப்படம் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். சிலவற்றை அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
என்னுடைய திரைப்படங்களுக்கு இடையில் சில வருட இடைவெளி இருந்ததற்கு இதுதான் காரணம்.” என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இத்திரைப்படத்தில் வரும் போர் காட்சிகளுக்கு மொத்தமாக 80,000 நடிகர்களையும் 300 குதிரைகளையும் பயன்படுத்தினார்களாம். அதுபோலவே, இந்தப் படத்தில் வரும் பாடலில் 5000 நடனக் கலைஞர்களை நடனமாட வைத்திருக்கிறார்கள்.
`அந்தகன்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் இந்த திரைப்படம் தொடர்பாக விகடன் பிரஸ் மீட்டில் பேசிய பிரசாந்த், “ வரலாற்று கதைகளை படமாக பண்ணும்போது கலைஞர் அய்யாவைத் தாண்டி யாரும் கிடையாது.
நான் அவருடைய வசனத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த ஐடியாவை சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார். அப்படிதான் `பொன்னர் சங்கர்’ திரைப்படம் உருவானது.
கலைஞர் அய்யா படத்தை பார்த்து என்ஜாய் பண்ணினார். அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் ஒரு வசனம் இல்லையென்றால் `ஏன் இந்த வசனம் படத்தில் இல்லை’ என நினைவில் வைத்து சரியாகக் கேட்பார்.

அந்தளவுக்கு கலைஞர் அய்யாவுக்கு நியாபகச் சக்தி இருக்கும். இந்தப் படத்தின் மூலம் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரிமிருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன்.” எனக் கூறினார்.
பிரசாந்த் சொந்தமாக ஒரு கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். அவருக்கும் கிராபிக்ஸ் மீது அலாதி ஆர்வம். `பொன்னர் சங்கர்’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை கவனித்ததும் பிரசாந்த்தான்.