பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. பொங்கல் வெளியீடு, மார்ச் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது மே 9-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் க்ரிஷ் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. இதில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வந்தது.
தற்போது இக்கதையினை இரண்டு பாகங்களாக பிரித்து, முதல் பாகம் மே 9-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இயக்குநர் பொறுப்பில் இருந்து க்ரிஷ் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்குநராக இறுதிகட்டப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.