சென்னை: சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கங்குவா’ படத்துக்குப் பிறகு வெளியாகவுள்ள ‘சூர்யா 44’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டுக்கு டீசர் வெளியாகிறது. படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். ‘சூர்யா 45’ என அழைக்கப்படும் இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இதில் மலையாள நடிகர் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா, காளி வெங்கட், ராமச்சந்திரன், கோதண்டம் உள்ளிட்ட பலர் ‘சூர்யா 45’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டராக கலைவாணன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக விக்ரம் மோர் மற்றும் கலை இயக்குநராக அருண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இம்மாத இறுதிவரை ’சூர்யா 45’ படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு சென்னை, மும்பை மற்றும் கேரளா ஆகிய ஊர்களில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.