சென்னை: எனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படத்துக்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால்பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வரும் 27-ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்டிஆர் பேசியதாவது: “சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. ’தேவரா’ எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. நாம் மொழியால் பிரிந்திருக்கிறோம். ஆனால் சினிமாவால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மை பிரிக்க முடியாது. எனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும்” இவ்வாறு ஜூனியர் என்டிஆர் தெரிவித்தார்.