ஊர் பெரியவரான ரவி (பிருத்வி), அவருடைய மகன் கண்ணன் (சுராஜ் வெஞ்சரமூடு) ஆகியோர் மீது கொலைக் குற்ற புகார் வருகிறது. அதன் மூலம் தன் பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள போலீஸ் எஸ்.பி. அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா), அவர்களை என்கவுன்ட்டர் செய்ய திட்டம் தீட்டுகிறார். இதையறியும் ரவி தரப்பு, அருணகிரியைக் கொல்ல முயற்சிக்கிறது. இதற்காக காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் ரவி. இதில் களமிறங்கும் காளியை வைத்து, எஸ்.பி.அருணகிரி வேறு திட்டம் போடுகிறார். மாறி மாறி நடக்கும் இந்த சடுகுடு ஆட்டத்தில் என்கவுன்ட்டர் நடந்ததா, அருணகிரி என்ன ஆனார், விக்ரம் யார் பக்கம் நின்றார் என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான பழிவாங்கும் கதைதான். அதில் குடும்பம், சென்டிமென்ட்டை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். புதுமையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு முடிவுரையைத் திரைக்கதையாக்கி இருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதைதான். அதை முடிந்தவரை சுவாரஸியமாகக் கொடுக்க இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
உதவி செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த மோதலுக்குள் வரும் நாயகனின் குடும்பத்தைப் பகடையாக வைத்து போலீஸூம் ஊர் பெரியவரும் உருட்டி விளையாடும் காட்சிகள் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் தாதா போல இருந்த காரணத்தால் போலீஸிடமிருந்தும் ஊர் பெரியவரின் அடியாட்களிடமிருந்தும் குடும்பத்தைக் காக்க நாயகன் சிக்கிக் கொள்ளும் காட்சியும், போலீஸ் உயரதிகாரி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் ரசிக்க வைக்கின்றன.
ஆனால், ஈகோ யுத்தத்தால் ஊர் பெரியவரை என்கவுன்ட்டர் செய்யும் அளவுக்கு போலீஸ் உயரதிகாரி செயல்படுகிறார் என்பது அதீத கற்பனை. கதைக்கு லீட் கொடுக்கும் அந்த அம்சம் படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடுகிறது. போலீஸ் உயரதிகாரிக்கும் ஊர் பெரியவருக்கும் என்னென்ன பிரச்சினை என்கிற நியாயமான காட்சிகளும் பெரிய அளவில் இல்லை. அப்படி காட்டப்படும் சில காட்சிகளும் போலீஸை குறைத்து மதிப்பிட்டு, நாயக பிம்பத்தை தூக்கிப் பிடிக்கிறது. வெட்டு, குத்து என படத்தில் ரத்தம் தெறிக்க வைத்திருப்பதைக் குறைத்திருக்கலாம். அதே நேரத்தில் விக்ரம் – துஷாரா விஜயன் தொடர்பான காட்சிகள் மனதில் ஒட்டிக் கொள்கின்றன.
விக்ரமின் காளி கதாபாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார் விக்ரம். அவருடைய கட்டுமஸ்தான உடலும் கதைக்கு உதவுகிறது. நாயகியாக துஷாரா விஜயன் அழகாக நடித்திருக்கிறார். கணவன் பழைய மாதிரி ஆகிவிடுவாரோ என்று தவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். போலீஸ் எஸ்.பி. கதாபாத்திரத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவருடைய டயலாக் டெலிவரி கூடுதல் பிளஸ். ஊர் பெரியவராக பிருத்வி சாந்தமாக வில்லத்தனம் செய்கிறார். அவருடைய மகனாக சுராஜ் வெஞ்சரமூடு போட்டிப் போட்டு நடித்துள்ளார். இன்னும் பல துணைக் கதாபாத்திரங்களும் படத்தில் உரிய பங்கை செலுத்தி இருக்கின்றன.
கதைக்கேற்ற பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். தேனி ஈஸ்வரின் கேமரா இரவுக் காட்சிகளை கச்சிதமாக படம் பிடித்திருக்கிறது. பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பில் படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் பட்டைத் தீட்டியிருந்தால் ‘வீர தீர சூரன்’ ஜொலித்திருப்பான்.