ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, வரும் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ், இந்திக்கான மொழிமாற்றப் பணிகள் பரபரப்பாகப் போய் கொண்டிருக்கின்றன சென்னையில். கிடைத்த இடைவேளையில் பேசினார் இயக்குநர் ஷங்கர்.
‘கேம் சேஞ்சர்’ எதை சொல்லப் போகுது?
அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்குமான மோதல்தான், கேம் சேஞ்சர். அது ஏன் அப்படிங்கறதுக்காக, ஹீரோ கதாபாத்திரத்துக்கு ‘பேக் ஸ்டோரி’ இருக்கு. இவங்க மோதலுக்கு இடையில அது எப்படி வளர்ந்து, எப்படி முடியுதுங்கறது சுவாரஸ்யமான கதை. அரசியல்வாதி- அதிகாரி மோதல்ங்கறதால இதுவும் லஞ்சம் பற்றி பேசுதா?ன்னு கேட்காதீங்க. இதுல வேற விஷயம் இருக்கும்.
வழக்கமா உங்க கதையைதான் படமா பண்ணுவீங்க. இந்தக் கதையை கார்த்திக் சுப்புராஜ்கிட்ட வாங்கியிருக்கீங்களே..?
கரோனா காலகட்டத்துல தயாரிப்பாளர்கள், சில ஹீரோக்களுக்காகக் கதை கேட்டாங்க. நான், இந்தியன் 2, இந்தியன் 3 பண்ணிட்டு இருக்கேன். இது போதாதுன்னு ‘வேள்பாரி’ பண்ணலாம்னும் இருக்கேன். என்கிட்ட இருக்கும் இன்னொரு கதைக்கு விஎஃப்எக்ஸ் முக்கியம். அதுக்கு புதுமுகம் போதும். இன்னொரு கதை ஸ்பை த்ரில்லர். அது வெளிநாட்டுல எடுக்க வேண்டிய படம். கரோனா காலகட்டத்துல அது சாத்தியமில்லை. அதனால, வேற ஒருத்தர் கதையை பண்ணலாம்னு கார்த்திக் சுப்புராஜ்கிட்ட வாங்கி ஆரம்பிச்ச படம் இது.
மாஸ் ஹீரோ படங்கள்ல தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கிறது வேற… இதுல அதுக்காக ஏதும் பண்ணியிருக்கீங்களா?
என் எல்லா படங்களும் தெலுங்குலயும் டப் ஆகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கு. அதனால அவங்களுக்குன்னு தனியா நான் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கமா என் படங்களுக்கு என்ன யோசிப்பேனோ, அப்படித்தான் இதைப் பண்ணியிருக்கேன். முதல் முறை நேரடி தெலுங்கு படமா பண்றதால, கதைக்குத் தகுந்த மாதிரி அவங்களோட கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்களைச் சேர்த்திருக்கோம். எப்படி நான் தமிழ்ப் படம் பண்ணும்போது தெலுங்கு ரசிகர்களுக்கும் பிடிச்சுதோ, நான் பண்ணியிருக்கிற தெலுங்கு படம், தமிழ் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்னு நம்பறேன்.
ராம் சரண், கியாரா அத்வானி பற்றி?
அடக்கி வைக்கப்பட்ட, அல்லது எப்ப வேணாலும் வெடிக்கலாம் அப்படிங்கற மாதிரியான பவர் உள்ள நடிகர் ராம்சரண். அவர் நடிப்பு அப்படித்தான் இருக்கும். அமைதியா பேசினா கூட, உள்ள ஒரு கரன்ட் இருக்குங்கற தன்மையை உணர முடியும். கியாரா அத்வானியோட நடிப்பும் யதார்த்தமா இருக்கும். அவருக்கு மொழி புரியலைன்னாலும் என்ன தேவையோ சரியா கொடுத்திருக்கார். இரண்டு பேருமே அருமையா நடனமாடியிருக்காங்க. ரசனையா இருக்கும்.
ஒரு பாடல் காட்சிக்கு நியூசிலாந்து போயிருந்தீங்களே…என்ன ஸ்பெஷல்?
இன்ஃப்ராரெட் சினிமாட்டோகிராபியில (Infrared cinematography) அதாவது அகச்சிவப்பு ஒளிப்பதிவுல பாடல் காட்சியை படமாக்கணும் அப்படிங்கறதுக்காத்தான், அங்க போனோம். அதுக்கு பரந்த நிலபரப்பு வேணும். காற்றுல தூசி கூட இல்லாத, பளிச்சுனு தெரியற நிலப்பகுதி வேணும்னு போனோம். கதைப்படி நாயகன், நாயகி காதலில் விழறாங்க. அவங்களுக்கு எல்லாமே வித்தியாசமா தெரியுது. வண்ணங்கள் மாறுது. வேறொரு மேஜிக் உலகம் தெரியுது. இன்ஃப்ராரெட்ல ஒளிப்பதிவு பண்ணும்போது அது தெரியும். அந்த மேஜிக்கை படத்துல பார்க்கலாம். ஒளிப்பதிவாளர் திரு அருமையா பண்ணயிருக்கார்.
உங்கள் படங்கள், லஞ்சம், ஊழல், நீதி, நேர்மைன்னு பல விஷயங்களை பேசுது. சினிமா மூலம் மக்களை மாத்திடலாம்னு நினைக்கிறீங்களா?
மக்கள்ல ஒருத்தனா இருக்கிற என்னை, என்னென்ன விஷயங்கள் பாதிக்குதோ, அதை படமா பண்றேன். ‘அந்நியன்’ வந்தபிறகு நிறைய பேர் எனக்கு மெசேஜ் பண்ணினாங்க, சிக்னல்ல சிவப்பு விழுந்தா நிற்கிறேன் அப்படிங்கற மாதிரி. அது சந்தோஷமா இருந்துச்சு. அட்லீஸ்ட் ஒரு சதவிகித மக்கள் அதைக் கடைப் பிடிக்கிறாங்கன்னா, அது என் படத்தின் நோக்கத்துக்கு கிடைச்ச வெற்றிதானே. ‘இந்தியன் 2’ படத்துல வீடு சுத்தமா இருந்தாதான் நாடு சுத்தமாகும்’ அப்படிங்கறதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.
சமீபத்துல ஒரு செய்தி படிச்சிருப்பீங்க. ஆட்டோல தனியா வந்த ஒரு அம்மாவோட நகையை பறிச்சுட்டு, எங்கயோ இறக்கிவிட்டுப் போயிட்டார், டிரைவர். அவர் மகன், அப்பா மேல போலீஸ்ல புகார் பண்ணி, அது செய்தியா வந்துச்சு. அதை ‘இந்தியன் 2’ எபெக்ட்டுன்னு எழுதும்போது மகிழ்ச்சியா இருக்கு. முழுசா ஒரே நாள்ல எதுவும் மாறும்னு நினைக்கலை. அங்கங்க விதை விழுது. காலபோக்குல மாறும்னு நினைக்கிறேன்.
நாலு வருஷம் உழைச்சு ஒரு படத்தை ரிலீஸ் பண்றீங்க. முதல் நாளே கடுமையான விமர்சனங்கள் வரும்போது எப்படி எடுத்துக்கிறீங்க?
அது ஏத்துக்கிட்டுதான் ஆகணும். எல்லோருக்கும் விமர்சிக்கிற உரிமை இருக்கு. அதை சவாலா எடுத்துக்கிட்டு போக வேண்டியதான். இதுல ஒரே ஒரு விஷயம் என்னன்னா, ஒரு படத்துக்கு பின்னால லட்சக்கணக்கான தொழிலாளர்களோட வாழ்வாதாரம் இருக்கு. அதைதான் யோசிக்கணும்.
இந்தியன் 3 எப்ப வரும்?
நான் ரெடியா இருக்கேன். இன்னும் சில காட்சிகள் ஷூட் பண்ண வேண்டியிருக்கு. அடுத்து ‘வேள்பாரி’க்கும் ஸ்கிரிப்ட் ரெடி.