கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன், த்ரிஷா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்தப் படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் குறித்த நினைவுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டதோடு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் செய்துள்ளனர்.
இது தொடர்பாக படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ், இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது:
சிலம்பரசன்: ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் , திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்
த்ரிஷா: ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.
இவர்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர்கள் விஜய் பிரகாஷ், நரேஷ் ஐயர் உள்ளிட்டோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், சோனி மியூசிக் நிறுவனம் இந்தக் கொண்டாட்டத்திற்கு lovefullyvtv.com என்ற ஒரு சிறப்பு இணைய தளத்தையும் உருவாக்கியுள்ளது