பண்ணை அடிமைத்தனத்தை எதிர்க்கும் கருப்பனின் கதையோடு ஆரம்பிக்கும் திரைக்கதை, வாத்தியாரின் பார்வையில் அரசியல் பாடம் எடுக்கத் தொடங்குகிறது. ஆனால் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அது, வேகவேகமாக நகர்ந்து செல்லும் காட்சிகளால் முழுமையடையாத உணர்வினைத் தருகிறது. சாதிய வர்க்க மொழி அரசியல், இடதுசாரிகளின் பங்களிப்பு என்று பொதுவுடைமை அரசியலின் தீவிரமான பக்கங்களைச் சமரசமின்றி திரையில் காட்டியிருப்பதற்குத் திரைக்கதை ஆசிரியர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறனுக்குப் பாராட்டுகள். ஆனால், அவற்றில் காட்சிகளை விட வசனங்கள் அதிகமாகி இருப்பது பாடம் எடுக்கும் தொனியை மேலோங்க வைக்கிறது. இதே காரணத்தால் முதலாளித்துவ பண்ணையார்களுக்கு எதிரான அழித்தொழிப்பு எழுச்சியின் தாக்கமும் சற்றே குறைந்துவிட்ட உணர்வு! ஆனால் இடதுசாரி இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்களால் உண்டான பிரிவைப் பதிவு செய்த விதம் சிறப்பு. விவசாயக் கூலிகள் தொடங்கி, தொழிற்சாலை தொழிலாளர்கள் வரை இடது சாரி அமைப்புகள், தொழிற்சங்களைச் சேர்ந்த தோழர்கள் உழைக்கும் மக்களின் உரிமையை பெற்றுத்தர எத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டனர் எனக் காட்சியப்படுத்தியற்கு ஒரு செவ்வணக்கம்.


இரண்டாம் பாதியில் மலைக்காட்டுக்குள் செல்லும் பயணம் திரைக்கதையின் சுவாரஸ்ய அனுபவத்தை அதிகரிக்கிறது. `நீ கூப்புடுறது இல்ல என் பேரு நான் சொல்றது தான் என் பேரு’, பெரும்பான்மை கூட்டம் சிறுபான்மை மக்களை எப்படி நசுக்குகிறது என்பதை விளக்கும் இரண்டு பாதைகளை வைத்து வரும் வசனம் என ‘நச்’ அரசியல் வசனங்களுக்கு உழைத்த வெற்றிமாறனின் எழுத்துக் கூட்டணிக்கும், ‘அரசால் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல’ என்று அரச பயங்கரவாதத்தின் மற்றொரு முகத்தைத் தோலுரிக்கும் இயக்குநர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கும் பாராட்டுகள். ராகவேந்திரன் கதாபாத்திரத்தை வைத்துச் சொல்லப்பட்ட மனிதனின் அகங்கார குணத்தின் அருவருப்பு ஒரு புறம், எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அதிகார மமதையில் பாடித் திரியும் அமுதனின் அசிங்கம் மறுபுறம் என ஆழமான கதாபாத்திர வடிவமைப்புக்குச் சான்றாக விளங்குகின்றன இப்பாத்திரங்கள்.