மலையாள சினிமா அளவுக்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட் தோழர்களின் வாழ்க்கையைப் பேசியதில்லை. தமிழ் சினிமாவை பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால், கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும், அது தடை செய்யப்பட்டு, தோழர்கள் மீது அடுக்கடுக்காக ‘சதி வழக்குகள்’ போட்டபட்ட தலைமறைவு காலகட்டம் குறித்து அது பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், புலவர் கலியபெருமாளின் வாழ்க்கை, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’யாக வெளிவந்து தமிழ்ப் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. விஜய்சேதுபதியைத் தொடர்ந்து தற்போது சமுத்திரக்கனி காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறி எப்படி கம்யூனிஸ்டாக உருவானார் என்கிற வரலாற்றுப் பின்னணியுடன் வெளியாகவிருக்கும் ‘வீரவணக்கம்’ படத்தில் முதல்முறையாக தோழர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதில் சமுத்திரக்கனியுடன் பரத் முதல் முறையாக இணைகிறார். தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஓர் அபூர்வ திரைப்படம் ‘வீர வணக்கம்’ என்று படத்தை எழுதி, இயக்கியிருக்கும் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன். இப்படத்தில் பரத் தவிர, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

“இடதுசாரிகளின் வரலாற்றில் புரட்சி பாடகியாக கேரள மக்களால் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி. கிருஷ்ண பிள்ளை அவர்களின் வீர வாழ்க்கை வரலாறுதான் திரைப்படம். ஜாதி கொடுமைகளுக்கும் அதனுடான கொடூர வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஒரு தமிழ் கிராமத்தின் விடியல் பயணம் தான் வீரவணக்கம். ஒரு தாய் மக்களான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு புது திரை அனுபவத்தை உறுதியாகத் தரும். ” என இயக்குநர் நம்மிடம் தெரிவித்தார். இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கிய மலையாள பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ என்கிற காவியத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த ‘வீரவணக்கம்’ என்கிற படக்குழு.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சமுத்திரகனியையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமியையும் மலையாளத்தில் முதன்முறையாக கதாநாயகன் கதாநாயகியாக அறிமுகம் செய்த படம் தான் ‘வசந்தத்தின்டே கனல் வழிகளில்’ . சமுத்திரக்கனி மீண்டும் பி.கிருஷ்ணபிள்ளையாக ‘வீரவணக்க’த்தில் நடித்திருப்பது கேரள ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நிலையில் தமிழ்ப் பார்வையாளர்கள் சமுத்திரக்கனியை ஒரு கம்யூனிஸ்டாகப் பார்க்கத் தயாராகி வருகிறார்கள்.

இத்திரைப்படத்துக்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து பாடல்களை வழங்கிடிருக்கிறார்கள். ‘சிம்மக்குரலோன்’ டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் முதல் முறையாக திரைப்படப் பின்னணி பாடகராக ‘வீர வணக்க’த்தில் அறிமுகமாகிறார். மீண்டும் டி.எம்.எஸ்ஸே பாடி உள்ளாரோ என எண்ணத் தூண்டும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ள புரட்சிப் பாடலை அவர் பாடியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.
‘வீர வணக்க’த்தில் ஆஸ்கார் விருது பெற்ற ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் நாட்டு நாட்டு உட்பட 600 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் யாசின் நிசார், கேரளாவின் முன்னணி நாட்டுப்புறப் பாடகர் சி ஜே குட்டப்பன், ரவிசங்கர் மற்றும் சோனியாவும் மற்றப் பாடல்களை பாடியுள்ளனர். ‘விடுதலை’ திரைப்படம், நிகழ்தலைமுறையிடம் வரலாறு குறித்து உருவாக்கிய ஆவலை, ‘வீரவணக்கம்’ விஞ்சிச் செல்லுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.