அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அவரது முந்தைய படமான ‘துணிவு’ உடன் ஒப்பிடும்போது, முதல் நாள் வசூலில் ‘விடாமுயற்சி’யும் குறிப்பிடத்தக்க ஓபனிங் கொண்ட படம்தான் என்பதையே தரவுகள் காட்டுகின்றன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘விடாமுயற்சி’ படம் நேற்று (பிப்.6) உலகெங்கும் வெளியானது. 2023-ம் ஆண்டு அஜித்துக்கு ‘துணிவு’ படம் வெளியானது. அதற்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் முதல் நாளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விமர்சன ரீதியில் ‘ஆவரேஜ்’ தன்மையைக் கொண்டுள்ள இந்தப் படம், அஜித் ரசிகர்களுக்கு புதுவிதமான திரை அனுபவம் தரக் கூடும் என நம்பப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில், அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான ‘விடாமுயற்சி’ முதல் நாளில் இந்திய அளவில் கிட்டத்தட்ட ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக நம்பகமான வர்த்தக நிலவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவிலான வசூல் விவரம் வெளிவந்தால், இந்த எண்ணிக்கை வெகுவாக கூடும் என்றும் தெரிகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் இந்திய அளவிலான முதல் நாள் வசூல் 24.4 கோடி என்பது நினைவுகூரத்தக்கது.
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், கதை சர்ச்சையில் சிக்கி பின்பு பேசி தீர்க்கப்பட்டு இப்போது வெளியாகி இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இது ஹாலிவுட்டின் ‘பிரேக் டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது கவனிக்கத்தக்கது. அஜித்துக்கான சம்பளம் ரூ.110 கோடியில் இருந்து ரூ.120 கோடி வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், ‘விடாமுயற்சி’யின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.200 எனத் தெரிகிறது. வார இறுதி நாட்களில் திரையரங்குகள் நிறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, இப்படம் லாபத்தை நோக்கி நகர்வது குறித்த விவரம் தெரியவரும். | வாசிக்க > விடாமுயற்சி Review: அஜித் ‘க்ளாஸ்’ + மேக்கிங் ‘ஸ்டைலிஷ்’, ஆனால்..!