ஆக்ஷனும் ஸ்டைலும் நிறைந்த பாத்திரமாக அர்ஜுன் தொடக்கத்தில் கவர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அவருக்குப் பெரிய வேலை இல்லாமல் போகிறது. தன் துடிப்பாலும், மிரட்டலான நடிப்பாலும் படத்தில் தனித்துத் தெரிகிறார் ரெஜினா கஸண்ட்ரா. ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த வேலையை மட்டும் செய்து, அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள்.
வெறும் மண்மேடுகளைக் கொண்ட அஜர்பைஜான் நாட்டுப் புறநகர் நிலவியலைத் தன் கேமரா கோணங்களாலும், கலர்டோனாலும் கடத்தி, இந்த சன்பென்ஸ், ஆக்ஷன் த்ரில்லருக்குப் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். ஆக்ஷனிலும், சேஸிங்கிலும், தொடக்கத்தில் வரும் பின்கதையைச் சுவாரஸ்யமான ‘கட்’களால் சொன்ன விதத்திலும் படத்தின் திரைமொழிக்கு வலுசேர்த்திருக்கும் என்.பி.ஶ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு, சோர்வடையும் சில இடங்களில் ஏனோ காட்சிகளை முடுக்கி விடத் தவறுகிறது.
அனிருத் இசையில், ‘பத்திக்கிச்சு’ பாடல் மட்டும் அஜித் குமாருக்கும் பார்வையாளர்களுக்கும் எனர்ஜி பூஸ்டர்! திரைக்கதையின் மீட்டரிலேயே ஆர்ப்பாட்டமில்லாமல் வரும் அனிருத்தின் பின்னணி இசை, சில ஆக்ரோஷ காட்சிகளில் மட்டும் ஒற்றை வெடியாக வெடித்திருக்கிறது. காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷோடு சேர்ந்து, சண்டை வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தர் கொடுத்திருக்கும் உழைப்பை, விசில் சத்தத்தில் உணர முடிகிறது.
அர்ஜுன், கயல் இருவருக்குமிடையேயான காதல், திருமணம், திருமணத்திற்குப் பிந்தைய உறவுச் சிக்கல் போன்றவற்றைப் பேசியபடி தொடங்குகிறது படம். மூன்று காலகட்டத்தை விவரிக்கும் இந்தப் பகுதியில் அஜித் குமாரின் தோற்றம் முன்னுக்குப் பின்னாக இருப்பது, சிறிது குழப்பத்தைத் தந்தாலும், காதலையும், திருமணத்தையும் முதிர்ச்சியோடு அணுகிய விதத்தால், இப்பகுதி அழுத்தமாகப் பதிகிறது.
ஒரு பயணத்தில் தொடங்கும் பிரச்னை, அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், பூதாகரமாகும் அதற்கான காரணம் என நகரும் திரைக்கதை, நேர்க்கோட்டிலேயே இறுதிவரை பயணிக்கிறது. இந்த நேர்க்கோட்டு அணுகுமுறையும், அஜர்பைஜானின் நிலப்பரப்பும் இந்த திரைக்கதையைத் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யமான திருப்பங்களும், ரசிக்க வைக்கும் காட்சிகளும் இல்லாததால், இடைவேளையிலேயே அயற்சி மோடுக்குச் செல்கிறது இந்த ‘முயற்சி’.