‘விஜய் 69’ படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘விஜய் 69’. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. அதற்குள் வெளிநாட்டு உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக் கொடுத்து வாங்கி இருக்கிறது ஃபார்ஸ் பிலிம்ஸ். தற்போது ‘விஜய் 69’ படத்தின் தமிழக விநியோக உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு சுமார் ரூ.100 கோடி வரை விலை பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்டாலும், இந்த உரிமை லலித் குமாருக்கு தான் கிடைக்கும் என்கிறார்கள். இவர் தான் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ படங்களின் தயாரிப்பாளர். மேலும், விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.