‘மர்மர்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் வர்த்தக நிபுணர்கள் பலரும் பெரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘மர்மர்’. புதுமையான வகையில் சொல்லப்பட்ட இப்படத்தின் கதைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளில் 100 திரையரங்குகளில் வெளியான இப்படம் 2-ம் நாளில் அப்படியே இரட்டிப்பாக ஆகியிருக்கிறது. இது வர்த்தக நிபுணர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏனென்றால் ‘எமகாததி’ மற்றும் ‘ஜென்டில்வுமன்’ ஆகிய படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், அப்படங்களைத் தாண்டி ‘மர்மர்’ படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் ‘மர்மர்’ படம் ஹவுஸ்ஃபுல்லாக செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால், இப்படம் கண்டிப்பாக தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.4 கோடியைத் தொடும் என்று வர்த்தக நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கிறது. இது இப்படத்தின் பட்ஜெட்டுக்கு பெரும் வெற்றி என்கிறார்கள். ஹேமந்த் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி.கே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒன்லைன் என்ன? – அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள்.
காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது திரைக்கதை. பார்வையாளர்களுக்குத் தரமான முறையில் பயம் காட்டியிருக்கிறது என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. வாசிக்க > மர்மர்: திரை விமர்சனம்