விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘சச்சின்’. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினத்தில் ‘சச்சின்’ படத்தை மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்து பணிகளைத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்பட மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சச்சின்’ மறுவெளியீடு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள், காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போதுள்ள தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் ‘சச்சின்’ படத்தை தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சச்சின்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.