மீண்டும் இந்திய சினிமாவுக்கு பெரும் தலைவலியாக உருவாகி இருக்கிறது இணையவழி பட வெளியீடு.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளம் திரையுலகினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. புதிய படம் வெளியான அன்றே அப்படத்தின் திரையரங்க பிரின்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகிவிடும். இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். இறுதியாக அதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வெற்றியும் கண்டார்கள்.
தற்போது மீண்டும் இணையத்தில் படம் வெளியாவது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதுவும், நல்ல பிரின்ட் வெளியாவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பிரம்மாண்ட படங்களின் இந்தி பதிப்பு மட்டும் எச்டி பிரின்டில் வெளியான அன்றே இணையத்தில் கிடைக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்துக்கு இந்தச் சூழல் ஏற்பட்டது. தற்போது ‘தண்டேல்’, ‘லவ்யப்பா’, ‘பேட்ஏஸ் ரவிகுமார்’ உள்ளிட்ட படங்கள் வெளியான அன்றே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது படக்குழுவினருக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.
அதே வேளையில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்தியில் வெளியாகவில்லை. அதன் திரையரங்க பதிப்பே இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியில் வெளியான இதர படங்களின் HD பதிப்பு இணையத்தில் வெளியாகிவிட்டது.
இதனை உடனடியாக திரையுலகினர் தடுக்காவிட்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று வர்த்தக் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து பெரிய முதலீட்டு படங்களுமே அனைத்து மொழிகளிலும் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தி பதிப்பு எப்படி இணையத்தில் வெளியாகிறது என்பதை கண்டுபிடித்து தடுக்க வேண்டும். அடுத்தாக ’எம்புரான்’, ‘ரெட்ரோ’, ‘கூலி’, ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட பல பெரும் முதலீட்டு படங்கள் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.