ராம் சரண் படத்தின் மீதான நம்பிக்கையை இயக்குநர் புஜ்ஜி பாபு சனாவின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. ‘உப்பெனா’ படத்துக்குப் பிறகு ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் புஜ்ஜி பாபு சனா. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் இதனை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ‘பாப்பு’ என்ற படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டார் புஜ்ஜி பாபு சனா. இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ராம் சரண் படம் குறித்தும் குறிப்பிட்டார். அதில் “‘உப்பெனா’ படம் வெளியான உடன் என் குடும்பத்தினர் அனைவரும் படம் பார்க்க திரையரங்குக்கு சென்றார்கள். அதில் என் அப்பா மட்டும் படம் பார்க்கவில்லை. மீதமுள்ள அனைவரும் பார்த்தார்கள்.
திரையரங்க வாசலில் நின்றுக் கொண்டு படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் படம் எப்படியிருக்கிறது என என் அப்பா கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி ராம் சரண் படத்துக்கு அவர் கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் புஜ்ஜி பாபு சனா.
இந்தப் பேச்சு ராம் சரண் படம் மீதான அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது. இதில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் ராம் சரணுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.