மும்பை: நடிகர் சல்மான் கட்டியிருந்த ராமர் கோயில் தீம் கொண்ட கைக்கடிகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு முஸ்லிமான அவர் மாற்று மதத்தையும், கடவுளையும் புரோமோட் செய்யும் விதமாக கடிகாரம் அணிந்தமைக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முஸ்லிம் மதகுரு ஒருவர் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி அளித்தப் பேட்டியில், “சல்மான் கான் ஒரு பிரபலமான முஸ்லிம் முகமக இருக்கிறார். அவர் ராம் எடிஷன் கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். அந்தக் கடிகாரங்கள் ராமர் கோயில் மகிமையை பரப்ப வடிவமைக்கப்பட்டது. சல்மான் கான் அதை அணிந்தது ஹராம். அவருடைய செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்டத்தை மதிக்க வேண்டும். அவருடைய செயல் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது.” என்றார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் கலந்து வருகிறார். அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் பட விளம்பர நிகழ்ச்சியில் சல்மான் கான் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.34 லட்சம் ஆகும். இது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட எபிக் எக்ஸ் ராம் ஜென்மபூமி டைட்டானியம் 2 ரக கடிகாரம் ஆகும். இதனை எதோஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கடிகாரத்தில் ராம ஜென்மபூமியின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கும் வகையில் அடையாளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் 44 மிமீ அளவு கொண்டதாகும். இக்கடிகாரத்தை கடந்த ஆண்டுதான் எதோஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ராம ஜென்மபூமி டிசைனில் இரண்டு கடிகாரம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.