கை வைத்த தொழில்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவர் முருகப்பா சென்ராயர் (தம்பி ராமையா). மனைவி இருக்கும்போதே, தனது ஊழியரான வள்ளிமலரை இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். இவரது பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் மற்றொரு பெண்ணான விசாகா, தனது காதல் கணவன் ஆல்பர்ட்டின் (பாடகர் கிருஷ்) குடும்ப வன்முறையிலிருந்து தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறார். முருகப்பாவின் அறிவுரைக்கு அடங்க மறுத்து பிளாக்மெயில் செய்யும் ஆல்பர்ட்டை, கொலைசெய்யும்படி தன் ஆட்களை அனுப்புகிறார். பிறகு முருகப்பாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பது கதை.
இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற பொறுப்புத் துறப்புடன் தொடங்கும் படம், 15-வது நிமிடத்திலேயே, ‘இது அந்த தொழிலதிபரின் கதை அல்லவா?’ என்று உணர வைத்துவிடுகிறது. உண்மையுடன் தேவையான அளவுக்குக் கற்பனையையும் குடும்ப சென்டிமென்டையும் கலந்து த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார், இதன் கதை, வசனம், பாடல்கள், எழுதி இசையமைத்து, முருகப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா.
அடிப்படையில் தம்பி ராமையா நல்ல திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக இருந்தாலும், நடிகராக அவர் சம்பாதித்துக் கொண்ட பெயர் உயரமானது. ஆனால், அதுவே பலவேளைகளில் ‘கத்தி நடிக்கிறார்’ என்கிற ரசிக ஆதங்கத்தையும் கொண்டு வந்து சேர்த்தது. இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு வீச்சுடன் அதை நிறுவியிருக்க முடியாது. அந்த அளவுக்கு முருகப்பாவின் அனைத்து உணர்வுப் பரிமாணங்களையும் கச்சிதமாக நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று முடிப்பதே இயற்கை’ என்கிற முதுமொழியை விட்டு விலகாமல், ஒரு தனிமனிதனின் வளர்ச்சியை, அவனுடைய பலவீனங்களை, அதைப் பயன்படுத்திக் கொள்பவர்களைச் சுற்றி அடுக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் ஈர்க்கின்றன. குறிப்பாகக் கொலை நடக்கும் பின்னணியை அமைத்த விதம், சொத்துக்களைத் தந்திரமாக அபகரிக்க நினைக்கும் நபர் சந்திக்கும் திருப்பம் என சுவாரஸ்யம் கூட்டுகின்றன முக்கியத் திருப்பங்கள்.
முருகப்பாவுக்கு அடைக்கலம் தரும் கருணை இல்லம் நடத்துபவராக வரும் சமுத்திரக்கனி, இறுதிக்காட்சியில் அறிவுரை தருவதைத் தவிர்த்திருக்கலாம். துணைக்கதாபாத்திரங்களில் வருபவர்களில் ஸ்வேதா, பாடகர் கிருஷ் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
கேதார்நாத், கோபிநாத் ஆகிய இருவரது ஒளிப்பதிவும் தம்பி ராமையாவின் இசையும் கதைக்குத் தேவையானதைக் கொடுத்திருக்கின்றன. அறிமுக இயக்குநர் உமாபதி ராமையா ‘அபவ் ஆவரேஜ்’ ஆகத் தேர்ச்சி பெற்று விடுகிறார்.
தனிமனித ஒழுக்கத்தைக் கொண்டே எந்தவொரு மனிதரும் அடையாளம் காணப்படுவார்; அவர் பிரபலமாக இருந்தாலோ சமூகம் அவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும். அதைத் தொலைக்கும்போது அவர் கட்டிய அத்தனை கோட்டைகளும் சரிந்து விழும் என்பதை விறுவிறுப்பாகச் சித்திரித்துள்ள இப்படம், சுவாரஸ்யமான சோக காவியம்!