ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர், கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினியின் ‘வேலைக்காரன்’, கார்த்திக்கின் ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’, சரத்குமார் நடித்த ‘வேடன்’, விஜய்யின் ‘பத்ரி’ ஆங்கில படமான ‘பிளட் ஸ்டோன்’ என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்திருந்தார்.
நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் ஆகியோருக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்துள்ளார். சினிமா தவிர, ஓவியம், இசைக் கருவிகளை வாசித்தல், சமையல் ஆகியவற்றிலும் திறமையானவரான இவர், மாணவர்களுக்கு வில்வித்தைப் பயிற்சி அளித்து வந்தார். தமிழக வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதற்காகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாகச் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவரது சிகிச்சைக் காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 5 லட்சம் வழங்கினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார்.
சமீபத்தில் அவர் தனது பேஸ்புக் பதிவில், “மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்துக்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். அவர் மறைவுக்குத் திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.