சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படம் அடுத்த மாதம் மறு வெளியீடு செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ரஜினி முருகன்’. சிவகார்த்திகேயனின் திரையுலக வளர்ச்சிக்கு உதவியத்தில் முக்கியமான படம் என்று பலரும் குறிப்பிடுவார்கள். அதன் காமெடி காட்சிகள், பாடல்கள் என இப்போதும் இப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது பல்வேறு பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில் மார்ச் மாதத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தை மறு வெளியீடு செய்ய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
தற்போது பெரும் வசூல் நாயகனாக சிவகார்த்திகேயன் இருப்பதால், இதன் மறுவெளியீடு வசூல் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பொன்ராம் இயக்கத்தில் உருவான படம் ‘ரஜினி முருகன்’. இதில் சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்கள். தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை கடந்து 2016-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.