ரஜினியுடன் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்ததாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால் இயக்கி நடித்துள்ள படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வருகிறார். நேற்று மாலை சத்யம் திரையரங்கில் தமிழ் திரையுலகினருக்கு பிரத்யேக திரையிடல் ஒன்று நடைபெற்றது.
‘பரோஸ்’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பேசியிருக்கிறார் மோகன்லால். அதில் “ரஜினி சாருடன் நடித்தது சந்தோஷம். படமும் எனது கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. என்னிடம் நெல்சன் வந்து கதை சொன்னபோது பிடித்திருந்தது, உடனே ஒகே சொல்லிவிட்டேன். கமல் சாருடன் பணிபுரிந்துள்ளேன்.
ரஜினி சாருடன் நடிக்க ஒரு வாய்ப்பு. அவரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். எனது மாமனாருடைய பல படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிய வாய்ப்பு அமையவில்லை. ‘ஜெயிலர்’ வாய்ப்பு தான் அமைந்தது. ‘பரோஸ் 3டி’ படத்துக்கு அழைத்திருந்தேன். அவர் ஜெய்ப்பூரில் இருப்பதாக தெரிவித்தார். இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாம் அனுப்பி வைப்பேன். அவர் இப்படத்தைக் காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.