மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன் (வ), புதன் என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்: 26-04-2025 அன்று ராகு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம் | 17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார் | 06-03-2026 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-05-2025 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2025 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம் | 21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி.
பலன்கள்: நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய மேஷ ராசி அன்பர்களே! பல நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த
நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம்பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அநாவசியப் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.
செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அநாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப் பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த ஆண்டு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத் தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
அரசியல்வாதிகள் இந்த ஆண்டு பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.
பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.
அஸ்வினி: இந்த ஆண்டு காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.
பரணி: இந்த ஆண்டு புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். ‘கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டமாக இருக்கும். எந்த காரியத்தையும் சூரியன் – செவ்வாய் – குரு ஆகிய ஹோரைகளில் ஆரம்பித்தால் வெற்றி தேடி வரும்.
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |