மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) – சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடைவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணாக்கர்கள் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
அஸ்வினி: இந்த வாரம் மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.
பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் குரு (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்:
01.01.2025 அன்று புதன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் தன ஸ்தானத்தைப் பார்க்கும் கேதுவால் அவ்வப்போது சிற்சில வேளைகளில் கையைப் பிசைந்து கொண்டு இருப்பீர்கள்.
நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சவுகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். பெண்களுக்கு புதிய கடனுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் நன்மை பயக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
ரோகினி: இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும்.
மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ) – சுக ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – களத்திர ஸ்தானத்தில் சூரியன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நெடுங்காலமாக மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டதில் இருக்கிறீர்கள். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும்.
கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு விவகாரங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பூர்வபுண்ணிய விரையாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
அரசியலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – ராசியில் சந்திரன், செவ்வாய்(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – பஞசம ஸ்தானத்தில் புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகன யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதையும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
அரசியல்துறையினருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.
பூசம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.
ஆயில்யம்: இந்த வாரம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு (வ) – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகுவகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம்.
வேலை மாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அரசியல்துறையினருக்கு கவுரவம் அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.
மகம்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பூரம்: இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சினைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் வெளிப்படும். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பரிகாரம்: காலபைரவரை வணங்குங்கள். சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தடையின்றி நடக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் – சுக ஸ்தானத்தில் சூரியன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) – லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். மங்களகாரகன் செவ்வாய் ராசியில் இருப்பதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது.
தொழில்துறையாளர்களுக்கு வாரம் முழுக்கவே பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள். கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு பொருளாதார வசதிகளும் பெருகவும் வாய்ப்பான காலமிது.
சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். மாணவமணிகளுக்கு கேளிக்கைகளில் ஈடுபட மனம் அலைபாயும். எச்சரிக்கை அவசியம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும்.
அஸ்தம்: இந்த வாரம் சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கல்வியில் பின் தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும். எல்லாக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் – சுக ஸ்தானத்தில் சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குரு பகவானின் அருள்பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள்.
தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலமிது.
அரசியல்துறையினருக்கு வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவகண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வீர்கள். பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
சுவாதி: இந்த வாரம் அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: நவகிரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை: ராசியில் புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு (வ) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை.
ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை, அதிகரிக்கும். குடும்பத்தில் நடைபெற இருந்த நல்லகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள்.
கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அனுஷம்: இந்த வாரம் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
கேட்டை: இந்த வாரம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும்.
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள்.
உத்தியோகத்தினருக்கு அலுவலகத்தில் கவுரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். இருக்கும் பணியில் நினைத்தபடி இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.
மூலம்: இந்த வாரம் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிடைக்கும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தையும் தன ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி செல்வீர்கள்.
பேசப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர்.
உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிந்து ஓரளவு நன்மைகள் நடக்கும். நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். பெண்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
திருவோணம்: இந்த வாரம் கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை, தாமதம் வரலாம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சினை தீரும்.
அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன் – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது |கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். தந்தை வழி மூலம் அனுகூலம் கிடைக்கும்.
அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். சேமிப்பு உயரும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் சுக்கிரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம்.
உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும்.
உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.
வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு நிறைவான ஆதரவு வந்து சேரும். மாணவமணிகளுக்கு சாதனைகள் புரிவதற்கு பொன்னான காலமிது.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம்.
உத்திரட்டாதி: இந்த வாரம் காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.
ரேவதி: இந்த வாரம் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்: குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |