29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே…
மேஷம்: அனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனது உழைப்பால் முன்னேறும் மேஷ ராசி வாசகர்களே இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
கிரகநிலை: இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும்.
வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூட உங்களின் பெருந்தன்மையை உணராமல், உங்களிடம் வழக்குக்காக வரலாம். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும்.
ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரயத்தனப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க கடுமையாக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து குறையலாம். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. பொறுப்புகள் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பணவரவு அமோகமாக இருக்கும். ஆனாலும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் குறையலாம். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.
மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. அமிலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அஸ்வினி: கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரணி: தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: அறுபடை முருகன் கோவிலில் ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும். “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும். செவ்வரளி மலரை அம்மனுக்கு படைத்துவர துன்பங்கள் யாவும் நீங்கும் | சனி பகவானின் பார்வைகள்:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |