போலீஸ் அதிகாரி அர்ஜுன் என்ற மேக்ஸ் (கிச்சா சுதீப்), இடைநீக்கம் முடிந்து புதிதாகப் பொறுப்பேற்க வருகிறார் புதிய ஸ்டேஷனுக்கு. வரும் வழியில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபடும் இரண்டு பேரை, அடித்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் அமைச்சரின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். இந்நிலையில் லாக்கப்பில் இருந்தவர்கள் திடீரென்று இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால் அமைச்சரின் ஆட்கள் அந்த இருவரையும் மீட்க வருகிறார்கள். அவர்களைக் கொன்றது யார்? மறுநாள் பொறுப்பேற்க வேண்டிய போலீஸ் அதிகாரி அர்ஜுன், அமைச்சரிடம் இருந்தும் அவரின் ஆட்களிடம் இருந்தும் தன்னையும் மற்ற போலீஸாரையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.
ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதால், அதுபோன்ற படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அந்த இலக்கணம் அப்படியே இதிலும் இருக்கிறது. ஆனால், பரபரப்புக்கோ, விறுவிறுப்புக்கோ பஞ்சமில்லாமல் பறக்கிறது படம். ஒரே நாள் இரவில் நடக்கும் இதுபோன்ற த்ரில்லர் கதைகளுக்குப் போரடிக்காத திரைக்கதைதான் பெரிய பலம்.
இயக்குநர் விஜய் கார்த்திகேயா அதை இதில் கச்சிதமாகச் செய்து பாராட்டைப் பெறுகிறார். அவ்வப்போது லோகேஷ் கனகராஜின் ‘கைதி’யை ஞாபகப்படுத்தினாலும் ‘மேக்ஸ்’ வேறுதான். எடுத்துக் கொண்ட கதைக்கு என்ன தேவையோ, அதிலிருந்து மாறாமல் பயணிக்கும் ‘ஸ்கிரீன்பிளே’ ரசிக்க வைக்கிறது. ஓர் இரவுக்குள் நடக்கும் கதையில் நேரம் குறைய குறைய அதிகரிக்கும் பதற்றத்தை சரியாகவே ‘மிக்ஸ்’ செய்திருக்கிறார், இயக்குநர். ஹீரோவுக்கான ரொமான்ஸ் ஏரியாவை தொடாமல் சென்றதும் அதை முன்னணி ஹீரோவான கிச்சா சுதீப் ஏற்றுக் கொண்டதும் கூட சரியான புரிதல்.
அமைச்சருக்கு வேண்டிய போலீஸ் அதிகாரியான வரலட்சுமிக்கும் சுதீப்புக்குமான மோதலில் என்ன நடக்கும் என்பது தெரிந்தாலும் பார்வையாளர்களைக் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது படம். முதல் பாதியின் வேகத்தை இரண்டாம் பாதி கொஞ்சம் குறைத்தாலும் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி பிடிக்கிறார், கிச்சா சுதீப். அவரது தோற்றத்தின் மூலம் அவர் நடத்தும் ஆக்ஷன் வேட்டைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. நடிப்பிலும் உடல் மொழியிலும் கம்பீரத்தைக் கொண்டு வருகிறார். நெகட்டிவ் கேரக்டரில் வந்து வரலட்சுமி சரத்குமார், ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமளிக்கிறார். இளவரசு, தனது கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் செய்கிறார். ஆடுகளம் நரேன், சுனில், சரத் லோகித் சவா, சம்யுக்தா உட்பட துணை கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இரவில் நடக்கும் கதை என்பதால் வித்தியாசமான கலர்டோனிலும் ‘லைட்டிங்’ அமைப்பிலும் ரசிக்க வைக்கிறது, சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு. படத்தின் வேகத்துக்கு நம்மை அழகாக இழுத்துச் செல்கிறது அஜனீஷ் லோக்நாத்தின் சுகமான பின்னணி இசை.
ஏகப்பட்ட லாஜிக் சிக்கல்கள், ஏற்கெனவே பார்த்த காட்சிகள், எளிதில் யூகிக்க முடிகிற கிளைமாக்ஸ் என இருந்தபோதும் பொழுதுபோக்குக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் தருகிறார், இந்த மேக்ஸ்!