"மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி

"மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" – இந்துமதி பேட்டி


‘மெய்யழகன்’ படத்தில் `அத்தான்… அத்தான்’… என அன்புத்தொல்லை கொடுக்கும் கார்த்தி கதாப்பாத்திரத்துக்கு ஈக்குவலாக ‘மச்சான்… மச்சான்’ என ஈர்க்கவைக்கும் ‘மெய்யழகி’தான் அரவிந்த்சாமியின் முறைப்பெண்ணாக வரும் இந்துமதி.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஏக்கம், பதட்டம், சோகம், பேரன்பு, பெருங்காதல் என எண்ணற்ற எக்ஸ்பிரஷன்களை வாரிக்கொடுத்து ரசிக இதயங்களை அள்ளிக்கொண்டவர். தற்போது, தனுஷின் ‘இட்லி கடை’, பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படம் என பிஸி மோடில் இருக்கிறார். அவரிடம் ‘மெய்யழகன்’ பட அனுபவங்கள் குறித்துப் பேசினேன்…

“உங்களோட கேரக்டர் இந்தளவுக்கு பேசப்படும்னு எதிர்பார்த்தீங்களா? இயக்குநர், உங்கக்கிட்ட அந்தக் கேரக்டர் பற்றி சொன்னப்போ எப்படி இருந்தது?”

“மெய்யழகன் படமும் சரி, என்னோட கேரக்டரும் சரி இந்தளவுக்கு பேசப்படுறது சந்தோஷமா இருக்கு. பெரியளவுல ரீச் ஆகும்னு எதிர்பார்க்கவே இல்ல. இப்போ வெளியில போனாலே, ‘மெய்யழகன்’ பட லதான்னு சொல்லி அன்பா வந்து பேசுறாங்க. அந்தளவுக்கு மக்கள் மத்தியில ரீச் ஆகியிருக்கு. ‘பிதாமகன்’ பட கேமராமேன் பாலசுப்ரமணியன் சார் தான், நான் நடிச்சுக்கிட்டிருக்கிற ‘சுந்தரி’, ‘சிங்கப்பெண்ணே’ சீரியல்களின் தயாரிப்பாளர். அவர்தான், இயக்குநர் பிரேம் சார்க்கிட்ட என்னை ரெக்கமென்ட் பண்ணினார்.

indhumathi Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
இந்துமதி

ஆனா, என் போட்டோவை பார்த்துட்டு ‘இவங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். இவங்களோட நம்பர் இல்ல’ன்னு சொல்லிட்டு நம்பர் வாங்கியிருக்கார். இது, தெரிஞ்சதும் நானே போன் பண்ணி பிரேம் சார்க்கிட்ட பேசினேன். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல என்னோட நடிப்பைப் பாராட்டி பேசியவர், இதுல உங்களுக்கு சின்ன ரோல்தான் அப்படின்னு தயங்கிக்கிட்டே சொன்னார்.

உடனே நான், ‘சின்ன கேரக்டர் பெரிய கேரக்டர் என்ன சார், ஒருநாள் ஷூட்டிங்னாலும் எனக்கு உங்க படத்துல நடிக்கிறது பெரிய விஷயம்’ன்னு சொன்னேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். அருள்மொழி, மெய்யழகன் மாதிரி ரொம்ப அன்பான, மென்மையான கேரக்டர்தான் பிரேம் சார். ஒவ்வொரு கேரக்டரையும் உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார். அதை உள்வாங்கி நடிக்கணும்னு ரொம்ப கவனமா இருந்தேன். லைவ் ரெக்கார்டிங் என்பதால எல்லாருமே முழு ஒத்துழைப்போடு நடிச்சாங்க. என்னோட போர்ஷன் மட்டுமே மூன்று நாள்கள் எடுத்தாங்க. எல்லாமே நைட் ஷூட். அரவிந்த்சாமி சார்கூட நடிச்சது பேரனுவம். அவருடைய ‘தளபதி’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

aravind sami Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
கார்த்தி – அரவிந்த்சாமி

அந்தப் படத்தைப் பார்த்துட்டு நம்ம ஊர்ல இவ்ளோ வெள்ளையா இருக்காங்களா?ன்னு யோசிச்சிருக்கேன். அவர்கூடவே நடிக்கப்போறோம்னு நினைச்சப்போ கொஞ்சம் தயக்கமும் எக்ஸைட்மென்ட்டும் இருந்துச்சு. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுல ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண வெச்சுட்டார். ‘நான் அருள்மொழி, நீங்க லதா’ அவ்ளோதான்னு அப்படியே கேரக்டரா மாறி, என்னையும் அப்படியே மாற்றி நடிக்கவெச்சார் அவரோட முதுகை தடவிட்டு போறது இந்தளவுக்கு பேசப்படும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.”

“கடைக்குட்டி சிங்கம், விருமன், மெய்யழகன்-னு கார்த்தியோட மூன்று படங்களில் நடிச்சுட்டீங்க. ஹாட்ரிக் வெற்றி எப்படி இருக்கு?”

“நானும் அவரும் ஒரே ஊர். அதாவது, கோவை. அதனால, ஊர் பந்தமான்னு தெரியல. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல அவருக்கு அக்காவா நடிச்சிருந்தேன். அந்த கேரக்டர் ரொம்ப பெருசா பேசப்பட்டது. கார்த்தி சார் ரொம்ப இயல்பானவர். எளிமையா இருப்பார். எல்லோரிடமும் நல்லா பேசுவார். ரொம்ப நாலேஜ். படத்துல மட்டுமில்ல நிஜத்திலும் அவர் மெய்யழகன் தான். ஆடியோ ரிலீஸ்ல என் கேரக்டரை பாராட்டினதோட, என் பாசமலர் அக்காக்கூட நடிச்சாலே படம் ஹிட்டுதான்னு பாராட்டினார்.”

“மெய்யழகன் படத்துல ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்காங்கன்னு ஒரு விமர்சனம் வந்ததே, அதை எப்படி பார்க்குறீங்க?”

“இதே படத்தை, மலையாளம், மராத்தின்னு மற்ற மொழிகளில் எடுத்திருந்தா எவ்ளோ ஸ்லோவா இருந்தாலும் ‘இதுதான் சினிமா’ன்னு கொண்டாடியிருப்பாங்க. தமிழ்ல இப்படியெல்லாம் படங்கள் வரமாட்டேங்குதேன்னு ஏங்கி கேள்வி எழுப்பியிருப்பாங்க. ஆனா, அப்படி எடுத்தா மட்டும் ‘என்ன ஸ்லோவா இருக்கு, பேசிக்கிட்டே இருக்காங்க’ன்னு சிலர் விமர்சிக்கிறாங்க. இதே படம் ஜெர்மனியில கட் பண்ணாம சக்சஸ்ஃபுல்லா எல்லோரும் ரசிக்கும்படியா ஓடியிருக்கு. ஆனா, தமிழ்ல எடுத்த படத்தை கட் பண்ண சொல்லியிருக்காங்க.

meyyazhagan Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
மெய்யழகன் இந்துமதி

என்னதான் சொல்ல வர்றாங்கன்னு கேட்குறதுக்கு யாருக்குமே பொறுமை இல்ல. காது கொடுத்துக் கேட்கவும் நேரமில்ல. எல்லாத்துக்கும் உடனடியா முடிவு தெரிஞ்சிடணும்னு நினைக்கிறாங்க. லைஃப்ல பொறுமை இல்லைன்னா போர் அடிச்சிடும். அழகியலை ரசிக்கணும்னா பொறுமை அவசியம். அதேநேரம், மெய்யழகன் படம் தங்களோட பால்ய கால நினைவுகளை கிளறிவிட்டு பின்னோக்கி பார்க்க வெச்சதா பலராலும் பேசப்பட்டுக்கிட்டிருக்கு.”

“நிஜ வாழ்க்கையில் உங்கள் முறைப்பையன்கள் பற்றி?”

“எனக்கு அத்தை பையன்கள், மாமா பையன்களே இல்ல. அதனால, படத்துல வர்ற காட்சி மாதிரி என் வாழ்க்கையில எதுவுமே நடக்கல. தாய் மாமாக்கள் இருக்காங்க. ஆனா, அவங்களை எல்லாம் நான் அப்பா ஸ்தானத்துல வெச்சு பார்க்கிறேன்.”

“கணவர் நல்லாருக்காரான்னு அரவிந்த்சாமி உங்கக்கிட்ட கேட்பார். முகம் சோகமா மாறி ‘இருக்கார்’ அப்படின்னு சொல்வீங்க. பிசினஸ் பன்றேன், அரசியல்ன்பாரு, எதுவுமே செய்யமாட்டார். ஒரே குடிதான்ன்னு வேதனையோடு சொல்வீங்க? ரியல் லைஃப்ல உங்க கணவர் எப்படி? உங்கக் குடும்பப் பின்னணி ?

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோவைதான். எங்கப்பா கனகராஜன் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., அம்மா சுமதி. ஒரேயொரு தம்பி. ரொம்ப கட்டுப்பாடான குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்துலருந்து இன்னைக்கு நான் ஒரு நடிகையா ஆகியிருக்கேன்னா, அதுக்கு காரணம் என்னோட கணவர் மணிகண்டனின் ஊக்கமும் பேரன்பும்தான். எங்களோடது காதல் திருமணம். ஒரே மகள் நிவேதா மணிகண்டன் வழக்கறிஞர் ப்ளஸ் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர். ரெண்டு பேருமே எங்களோட பாதையில சாதிச்சுக்கிட்டிருக்கோம். ரெண்டு பெண்களின் வெற்றிக்கு பின்னால் என் கணவர்தான் இருக்கிறார்.

indhumathi 7 Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
கணவர் மணிகண்டனுடன் இந்துமதி

‘மெய்யழகன்’ படத்துலதான் அப்படி. நிஜ லைஃப்ல கணவர் ரொம்ப பொறுப்பானவர். தங்கமான மனசு. உற்சாகப்படுத்தி முன்னேற்றிவிடுற குணம். நல்லபடியா பிசினஸ் பன்றார். வீட்டு வேலைகளை எங்களோடு பங்கிட்டு செய்வார். நான், ஷூட்டிங் போயிட்டேன்னா என்னோட இடத்துல இருந்து மகளை பார்த்துப்பார். நான் 36 வயசுலதான் சினிமாவுக்கு என்ட்ரி ஆனேன். நிறைய சீரியல்கள், விளம்பரப்படங்கள், வெப் சீரியல்கள்னு எல்லாமே பன்றேன். அண்ணி, அக்கா, அம்மா ஏன் பாட்டி கேரக்டர் வந்தாக்கூட அர்ப்பணிப்போட நடிப்பேன். அந்தளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன்.

பொதுவா, நான் நடிக்கிற படங்களைப் பார்த்துட்டு ‘உங்க நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு’ன்னு எல்லோரும் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷம். அடிப்படையில நான் ஒரு அம்மா. அதனாலதான், இயல்பா அம்மா கேரக்டர்களில் நடிக்க முடியுது. ஆனா, ரியல் லைஃப்ல நான், என் பொண்ணுக்கு ரொம்ப ஃப்ரெண்ட்லியான அம்மா. இயக்குநர் மகேந்திரன் சார், ருத்ரய்யா, பாலசந்தர் சார் எல்லோரும் பிடிக்கும். ஷோபா, சில்க் ஸ்மிதா பிடித்த நடிகைகள்.

indhumathi 77 Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
கணவர் மணிகணன், மகள் நிவேதாவுடன் இந்துமதி

சினிமா மீதான நேசிப்பாலதான் கோவைலருந்து சென்னைக்கு ஷூட்டிங் போய்ட்டு வந்திட்டிருக்கேன். ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா சொந்த ஊரான கோவைக்கு பறந்து போயிடுவேன். கணவர், பொண்ணு எல்லாருமே அங்க இருக்கிறதால என்னோட உலகமே கோவைதான். எனக்காக அவங்களை சென்னைக்கு கொண்டுவர விருப்பமில்ல. அவங்களுக்கு பிடிச்ச இடத்திலேயே வாழட்டும். அவங்களுக்காக நாம எவ்ளோ தூரம் வேணும்னாலும் பயணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ‘மெய்யழகன்’ பார்த்துட்டு கணவர் அப்படியே அழுதுட்டார். பாட்டி முத்துலட்சுமி ரொம்ப பாராட்டினாங்க. இதைவிட எனக்கு வாழ்க்கைல வேற என்ன பெரிய சந்தோஷம் இருந்துடப்போகுது?.”

“கோவை பொண்ணு நீங்க. மெய்யழகன்ல தஞ்சாவூர் பொண்ணா நடிக்கும்போது, அந்த ஊர் ஸ்லாங்கிற்கான டயலாக்கை பேசும்போது எப்படி இருந்தது?”

“நான் எல்லா படத்திலும் சொந்தக்குரலில்தான் டப்பிங் கொடுக்கிறேன். தனுஷ் சாரோட ‘இட்லி கடை’ படத்துல வேகமா மதுரை ஸ்லாங்குல பேசணும்னு சொல்லிக்கொடுத்தார். அதேமாதிரி, பண்ணினேன். கோயம்புத்தூர் ஸ்லாங் நார்மலா ஸ்லோவாத்தான் இருக்கும். ஆனா, படங்களில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காண்பிச்சு எல்லோருமே அப்படி பேசுவாங்கங்குறமாதிரி ஆக்கிட்டாங்க.”

20241215 151118 Thedalweb "மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி
நடிகை இந்துமதி

“கோவையிலிருந்து சென்னை வந்துட்டு போறதால நீங்க மிஸ் பண்ணின வாய்ப்பு, கேரக்டர் இருக்கா?”

”பெரும்பாலும் நான் எதையும் மிஸ் பண்றதில்லை. ஆனா, `ரகு தாத்தா’ படத்துல கீர்த்தி சுரேஷோட அம்மா கேரக்டருக்கு நான் தான் நடிக்கவேண்டியிருந்தது. கடைசி நேரத்துல என்னால கலந்துக்கமுடியாத சூழல். ஆனா, ‘சைரன்’ படத்துல கீர்த்தி சுரேஷ்கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம்.”



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *